சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு 14-ம் தேதி ஏப்ரல் 2023-ல் தொடங்கி 13-ம் தேதி ஏப்ரல் 2024-ல் முடிவடைகிறது. இப்புத்தாண்டின் துவக்கம் சூரியனின் வருடாந்திர மேஷ ராசிப் பெயர்ச்சியை வைத்து கணிக்கப்படுகிறது, எனவே இதனை செளரமான நாட்காட்டி என்றழைக்கின்றனர. பல நாட்காட்டிகள் (காலண்டர்) வழக்கத்தில் இருந்தாலும் இதுதான் மனிதனுக்கு மிகவும் பொருத்தமான நாடகாட்டி.
இப்புத்தாண்டு துவக்கத்தை வேறு வேறு பெயர்களில் மக்கள் கொண்டாடுகின்றனர். இதை நாம் புத்தாண்டு என்றும், மலையாளிகள் விஷு என்றும், பஞ்சாபிகள் வைசாகி என்றும், அஸ்ஸாமிகள் பிஹு என்ற பெயரிலும் கொண்டாடுகின்றனர். இவையல்லாது சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, மாலத்தீவு, மொரிசியஸ் மற்றும் சில தென்கிழக்கு நாடுகளிலும் கொண்டாடி வருகின்றனர்.
சோபகிருது என்றால் புனித காரியங்களை குறிக்கிறது. இவ்வாண்டில் குருவின் மேஷப் பெயர்ச்சி இருப்பதால் புன்ய கர்மாவையும், அறிவுத்தேடலையும் நோக்கிய பயணத்தில் மக்கள் ஈடுபடுவர் என நம்பலாம். ஏனென்றால் மேஷ ராசி காலப்புருடனின் தலையைக் குறிக்கிறது, குரு அங்கே பயணிப்பதால் இவ்வகை மாற்றங்களை எதிர்பார்க்கலாம். இருப்பினும் குருவின் ஆதிக்கம் கணக்கிட முடியாத பலன்களை தரவல்லது. குருவின் காரகத்துவம் ராணுவ அதிகாரிகளை குறிப்பிடுவதால் போர் மற்றும் அரசியல் மாற்றங்கள், புரட்சிகள் போன்றவையும் இருக்கக்கூடும்.
வானிலைக் கண்ணோட்டம்
சோபகிருதில் பொதுவாகவே சிறப்பான மழை மற்றும் வானிலை நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாண்டில் குரு மேஷப் பெயர்ச்சியும் இருப்பதால் நமக்கிது தெளிவாக புலப்படுகிறது. ஜோதிடத்தில் குரு மழைமேகத்தை, மழையை நேரடியாக குறிக்கவில்லை என்றாலும் குருவின் காரகத்துவம் வளர்ச்சியையும், செழிப்பையும் குறிக்கிறது, எனவே மழை சம்பந்தமான விஷயங்களை சேர்த்துக் கொள்ளலாம். இருப்பினும் குரு மேஷத்தில் ராகுவுடன் 7 மாதங்களுக்கு (ஏப்ரல் 22-ல் இருந்து நவம்பர் 28 வரை) காலம் கழிக்கப் போகிறார் எனவே வானிலை மாற்றங்கள் உச்சத்திற்கு செல்லவும் வாய்ப்புள்ளது. இது என் கவனத்தை எல்-நீன்யோ பக்கம் திருப்புகிறது, எல்-நீன்யோ என்பது பசிபிக் பெருங்கடலில் உண்டாகும் பருவ மாற்றம். இது கடும் புயல், மழை மற்றும் பஞ்சம் விளைவிக்கும். இது கடல் பிராணிகளுக்கும், பவள பாறைகளுக்கும் பெருஞ்சேதம் விளைவிக்கும். சனியின் மூன்றாம் பார்வை சதயத்தில் இருந்து மேஷத்தில் விழுவதால் எல்-நீன்யோவின் வருகைக்கான வாய்ப்பு இவ்வாண்டில் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.
ஜூன் முதல் ஆகஸ்ட் 2023 வரை கடும் வானிலை நிலவ வாய்ப்புள்ளது. இதில் மலைப் பகுதிகளில் அதிக மழையும், மட்டப் பகுதிகளில் (plains) காய்ந்த வானிலையும் சூழலாம். மட்டப் பகுதிகளில் நவம்பரில் இருந்து மழை சீராக பெய்ய வாய்ப்புள்ளது.
டெக் அவுட்லுக்
ராகு மார்ச் 2022ல் இருந்து மேஷத்தில் இருப்பது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது. குரு பெயர்ச்சியின் மூலம் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி இன்னும் பல விதங்களில் பெருகும். இருப்பினும் கிரகண காலமான ஏப்ரல் 22 முதல் மே 4 வரை செயல்முறைகளில் பிழை திருத்தும் காலம்.
மே 8 முதல் மே 21 வரை குரு, ராகு, புதன் மேஷத்தில் இருப்பர். இந்த காலத்தில் நீங்கள் வெகு நாளாக எதிர்பார்த்த பதில்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எனினும் செவ்வாய் கடகத்தில் இருப்பது கிடைத்த பதிலை உடனே ஏற்றுக்கொள்ளச் செய்யாது.
ராகு மீன ராசிக்கு நவம்பர் 29, 2023ல் பெயர்ச்சியாகிறார். இது ராகுவை சனிக்கும் குருவிற்கும் இடையில் நிறுத்தும். இது டிசம்பர் 9ல் இருந்து டிசம்பர் 28 வரை தொழில்நுட்ப நிறுவனங்களின் இடையே போட்டியை அதிகறித்து போர் நிலையையும் மூட்டச் செய்யலாம். இது செவ்வாய் மற்றும் சூரியனின் பெயர்ச்சி கேட்டை நட்சத்திரத்தில் இருப்பதால் நிலவலாம்.
அரசியல் கண்ணோட்டம்
குரு பெயர்ச்சி அமைதி சூழ்நிலையை வருகின்ற ஆகஸ்டு 2023 நிலைநாட்டும் ஆனால் அதற்கு மேல் அரசியலில் ஒரு நிலையில்லா சூழ்நிலை உண்டாகும் வாய்ப்புள்ளது. செப்டம்பர் 2023ல் இருந்து சூழ்நிலை இன்னும் மோசமாகி தலைவர்கள் தமது advisor-களை வேலைநீக்கம் செய்யும் வாய்ப்பும் உள்ளது. அதேபோல் மக்களுக்கும் தலைவர்கள் மீது நம்பிக்கை குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. அக்டோபர் 14ல் இருந்து அக்டோபர் 28 2023 வரை வரக்கூடிய சூரிய சந்திர கிரகணங்கள் அரசியலிலும் போர் சூழ்நிலைகளை உருவாக்க வாய்ப்புள்ளது. துலாம் ராசியுடன் சம்பந்தப்பட்ட நாடுகளில் இச்சூழல்கள் நிலவ அதிக வாய்ப்புள்ளது.
Comments