அட்சய திருதியை (அக்ஷய திருதியை) நாள் வருடத்தில் ஒருமுறை மாத்திரம் வரக்கூடிய மிகச் சிறந்த நன்னாள். இது செழுமை, வளர்ச்சி போன்றவைகளை அள்ளித்தரக்கூடிய நாளாகும். இன்று தொடங்கும் புதுக் காரியங்கள் பல மடங்காகப் பெருகும் சிறப்புடையது. நீங்கள் புதிய தொழில் தொடங்குவது, நகைகள் சொத்துக்கள் வாங்குவது, சுபகாரியங்கள் செய்வது, பக்தி மார்க்கத்தில் செல்வது, தொண்டுகள் போன்றவற்றில் ஈடுபடலாம். இதுபோக, இந்நாளில் உங்கள் ஜாதகத்தில் உள்ள அசுப கிரகாச்சாரங்களும் பலனளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நாள், சித்திரை மாதம் வளர்பிறை திருதியை திதியில் கொண்டாடப்படுகின்றது. அட்சய திருதியை என்றால் எப்போதும் வளர்ச்சி தரும் திருதியை என்று பொருள். வளர்பிறை திருதியை எல்லா மாதங்களும் வருகிறது ஆனால் சித்திரை மாதம் வரக்கூடிய வளர்பிறை திருதியையில் தான் சூரியனும் சந்திரனும் உச்சம் பெறுகின்றனர். சூரியனும் சந்திரனும் ஒளிரும் கிரகங்கள், சூரியன் பூமியை உண்டாக்கினார், சந்திரன் பூமியில் உயிர்கள் வாழ வழி செய்தார். எனவே சூரியனை தந்தையென்றும் சந்திரனை தாயென்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எனவே தான் இவர்களின் உச்சம் பெற்ற நாள் நமக்கு சிறப்பு பலனளிக்கும் நாளாக அமைகிறது.
அட்சய திருதியை உண்டான கதை
பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடையும்போது கடலில் இருந்து வெளிவந்த பல விஷயங்களில் அட்சய பாத்திரமும் ஒன்று. இப்பாத்திரம் என்ன உணவு கேட்டாலும் தரும் சக்தியுடையது. இதனை பாண்டவர்களின் வறுமையை போக்க சூரிய தேவர் இதே நாளில் தான் அவர்களுக்கு கொடுத்ததாக மகாபாரதம் சொல்கிறது. எனவே இந்நாளுக்கும் அட்சயத்தின் தன்மை உண்டென்று நம்பப்படுகிறது.
மேலும் பல்வேறு புராணக் கதைகளும், இதிகாசப் பதிவுகளும் இந்நம்பிக்கையை ஊக்குவிக்கின்றன:
மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் பிறந்த தினம் இன்று.
மகாபாரதத்தை இன்று தான் வேத வியாச மகரிஷி கணபதிக்கு உறைக்கத் துவங்கினார்.
கண்ணன் தனது பால்ய சிநேகிதன் சுதாமாவிற்கு எண்ணற்ற உணவுப் பொருட்களை கொடுத்த தினமும் இதுவே.
விண்ணுலகின் சொத்துக்களுக்கு குபேரர் பொருளாளராக பதவியேற்ற தினம்.
உணவு தானியங்களின் அதிதேவதையான அன்னபூரணி தேவி பிறந்த தினம்.
பகீரதனின் தவத்திற்கு இணங்கி கங்கா தேவி பூமியில் நதியாக பாய்ந்த தினம்.
ஆதி சங்கரர் மகாலட்சுமிக்கு கனகதாரா ஸ்தோத்திரம் பாடிய தினம்.
பகவான் ராமர் பிறந்த திரேதா யுகம் துவங்கிய தினம்.
பூரி ஜகநாதர் கோயிலின் வருடாந்திர ரதயாத்திரை கட்டுமானம் துவங்கும் தினம்.
அட்சய திருதியையில் என்னென்ன செய்யலாம்
தர்ம காரியங்கள் செய்து பலமடங்கு பலன்களைப் பெற மிகச்சிறந்த நாள். பூஜைகள், யாகங்கள் போன்றவை கணபதி, லட்சுமி, குபேரர், நாராயணர் போன்ற கடவுளர்களுக்கு செய்யலாம். தொண்டுகள், கூட்டு பிரார்த்தனை, கூட்டு தியானம், கால்நடைக்கு உணவளித்தல், மரம் நடுதல் போன்றவைகளும் செய்யலாம். எது செய்தாலும் நேர்மறையான அணுகுமுறையும் இந்நாளின் சுபத் தன்மையும் எதிரொலிக்கும் விதமாக செய்வது அவசியம்.
Comentarios